செவ்வாய், 24 ஜனவரி, 2012

சுனாமி என்ற அரக்கன்


   சூரியன் உதித்தும் 
    உதிக்காமலிருந்த நாள்
    அமைதியான கடலன்னை
      சினம் கொண்ட நாள்    

அழகிய அலைகள்         
அவலட்சணமான நாள்….
இரக்கமில்லாதவர் கண்களிலும்
இரத்தம் வடிந்த நாள்….

கவிஞர் வர்ணித்த கடல்
உயிர் கொல்லியாகிய நாள்
அன்பான குடும்பங்கள் 
அநாதரவாகிய நாள்….

புதிதாய் மலர்ந்த பிஞ்சு
மலர்கள் மடிந்த நாள்….
புதுவருடத்தை வரவேற்றிருக்கும்
இதயங்களை உடைத்த நாள்….

உலகின் எதிர்கால பிரஜைகளை 
காவு கொண்ட நாள்
அழகிய மனைகள் மண்ணோடு
கலந்த நாள்…..

இயற்கையை ரசித்த உள்ளங்கள்
அதனை சபித்த நாள்….
இறைவன் இருக்கின்றானா? என பலரை 
எண்ணச் செய்த நாள்….          

பகலவன் ஓய்வு பெற்றாலும் 
மக்கள் மனங்கள் ஓயாத நாள்….
வாழ்வை ஆரம்பிக்காத வாலிப வயதினரை 
வழியனுப்பி விட்டாயே!….

வாழத் துடிக்கும் இலட்சிய வாதிகளை
வாட வைத்து விட்டாயே1…
வாய் பேசத் துடித்த குழந்தைகளின் வாயை
ஒட்டி விட்டாயே!….

மாணவக் கனவுகளை 
மண்ணாக்கி விட்டாயே.
அநாதையான குழந்தைகள் ஆதரவில்லாமல்
ஆறுதலடைகின்றனர்.


அழுவதற்கோ கண்ணில் இல்லை கண்ணீர்
அன்பு காட்டவோ அருகினில் இல்லை அன்னைஅடுத்து என்ன?
சேயை சுமந்த தாயை போல 
எம்மை சுமந்த கடலே!…

தாலாட்டும் தாயின் பாடலை 
ஒத்து ஒலிக்கும் அலைகளின் ஓசை
சேயை சபியாத தாயை போலிராமல் சபித்து
விட்டாயே உன் சேய்களை

அலையே உனக்கும் கரைக்கும் 
இருக்கலாம் ஊடல்கள்
பொறுமையுடன் தீர்க்கலாம் பொங்கிவிட்டாயே!…

உன் ஊடலுக்கு பொதுமக்களை பொசுக்கி
இரையாக்கி விட்டாயே!…
சினம் கொண்ட இயற்கையின் சீற்றம் 
அடங்கிவிட்டது.

உதிர்ந்து போன ரோஜா இதழ்கள் தான் 
கருகிவிட்டன.
அலையரக்கன் அழித்து விட்டான் உயிர்களை
ஆனால்
உள்ளங்களின் எண்ணங்கள் காற்றோடு  கலந்து
உறவாடுகின்றன உறவுகளுடன்
அருகினில் ஆறுதல் ஆயிரம் இருப்பினும்
அம்மா இல்லையே மடி சாயவென
மனதினுள் மடிகிறது மலரினை ஒத்த பிள்ளை

மக்களே வேண்டாம் உங்கள் நிவாரணம்
எம் உறவுகளை மாத்திரம் மீண்டும் மீட்டுத் தாருங்கள்
அடித்த அலையின் வேகத்தை தணித்தது
விஞ்ஞானம்
அழுத கண்களின் கண்ணீரை அளப்பதற்கு 
கிடைக்கவில்லை கருவி 

கசங்கிய கனவுகள் மீண்டும் விரித்து
விடப்படும் நாள் தொலைவில் இல்லை
காத்திருங்கள் காலம் பதில் தரும்
ஒரு நாள் உயிர் வாழ மண்ணில் பிறக்கும்
மலரினை போல்
நம் மனங்களிலும் நம்பிக்கை பிறக்க வேண்டும்


 ரா.கலைச்செல்வி
 3ம் வருடம்
 கலைப்பீடம்
 கொழும்பு பல்கலைக்கழகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites