செவ்வாய், 26 ஜூன், 2012

ஜனநாயகம் என்றால் என்ன?


ஜனநாயகம் என்றால் என்ன?



ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:- 

1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி


என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில், 

‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார். 

மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,

‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.

 ‘தோமஸ் ஸ்கூப்’ ‘ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார். 

ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். 



ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்


மக்களாட்சி என கூறப்படுகின்ற ஜனநாயகமானது மனித உரிமைகளை பாதுகாத்தல், வாக்குரிமை, தேர்தல், சகிப்புத்தன்மை, சமத்துவம், ஊடக சுதந்திரம், போன்ற பல பண்புகளை கொண்டுள்ளது. மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம் என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை நோக்கிய மாற்றம் ஜனநாயகமயப்படுத்தல் ஆகும். உலகில் ஜனநாயகமயப்படுத்தல் செயன்முறையானது 1798களில் ஆரம்பமானது. 20ம் நூற்றாண்டுகளில் ஜனநாயகமயப்படுத்தலானது உலக நாடுகள் பலவற்றில் வெற்றிகரமடைந்தது என கூறலாம். யுத்தம் புரட்சி காலணித்துவ போராட்டம் என்பவற்றின் ஊடாக மன்னராட்சி மற்றும் சர்வதிகார ஆட்சி என்பனவற்றை எதிர்த்து ஜனநாயக ரீதியான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஜனநாயகப்படுத்தல் செயன்முறையானது 2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பமாகியது. 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர்அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஜனநாயகமயப்படுத்தல் நடைபெற்றது.
ஜனநாயகமயப்படுத்தலானது 3 அலைகளாக பிரித்து நோக்கப்படுகின்றது. 

அந்த வகையில் 1ம் அலையில் ஜனநாயகமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 1ம் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, போன்ற நாடுகள் ஜனநாயகப்படுத்தப்பட்டன.

 அதனைத் தொடர்ந்து 2ம் அலையில் ஜனநாயகமானது பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றக்கொள்ளப்பட்டது.




 3ம் அலையின் போது ஜனநாயகமானது பூகோளமயப்படுத்தப்பட்டது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ இது குறித்து குறிப்பிட்டுள்ளார். ஏறத்தாழ 1970 களில் 3ம் அலையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. 3ம் அலை காலப்பகுததியில் ஸ்பெயின், போர்த்துக்கல் போன்ற நாடுகள் அதிகார ஆட்சியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு மாறியது. இதனைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மேலும் இந்த ஜனநாயக மாற்றத்தின் விளைவாக தென்கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஜனநாயகத்திற்கு மாறின. 1970களில் உலகில் 80 நாடுகள் ஜனநாயக நாடுகளாக காணப்பட்டன. 3ம் அலை ஜனநாயக காலகட்டமானது 1990களில் ஜனநாயக வளர்ச்சி பாய்ச்சலாக காணப்படுகின்றது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ கருத்துப்படி, உலகில் ஜனநாயகம் என்பது எந்த ஆட்சி முறையினதும் கடைசி கட்டமாக இருக்கும் அத்துடன் ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மாற்றமடையாது என கூறப்பட்டது. மேலும் 3ம் அலை ஜனநாயகமயப்படுத்தலின் போது இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாடு ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என கூறலாம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஜனநாயகமயப்படுத்தலிலும் அன்று முதல் இன்று வரை இனத்துவ வேறுபாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றன. 


இனத்துவம் என்றால் என்ன?

இனத்துவம் என்பது மனிதகுல வரலாற்று காலம் முதல் இருந்த வருகின்றது.  Ethic என்ற சொல் 14ம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் மாற்றமடையாதது என எதுவுமில்லை என்பதால் வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போயுள்ளன. இன்றுள்ள இனக்குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக்குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம். புதிய இனக்குழுக்களின் உருவாக்கம்,இனக்குழுக்களுக்கிடையே இணைவு, இனக்குழுக்கள் மறைவு என்பது சமூகத்தின் இயங்கியலின் தவிர்க்க முடியாதவையாகும். சமூக ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக இனத்துவம் மற்றும் இனத்துவக் குழுக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். காலத்திற்கு காலம் இனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்த ஆய்வாளர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை பயன்படுத்தியுள்ளனர். இனத்துவம் குறித்து வெளியான கட்டுரைகளில் நியூயோர்க் பல்கலைக்கழகத்தினால் வெளியிட்ட ‘Ethic Classification in Global Perspective’  என்ற கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த இனத்துவ அடையாளங்கள் ஏதோவொரு வகையில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுகின்றன. 


ஜனநாயத்தை கட்டியெழுப்புவதில் இனத்துவத்தின் ஆதிக்கம்
இனத்துவ அடையாளங்களும், வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் மாற்றத்திலும் இருப்பிலும் பாரிய தாக்கம் செலுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் இனத்துவ வேறுபாடுகள் சாதகமான விளைவுகளை மட்டுமன்றி பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது எனலாம். உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்று வரும் பெரியளவான யுத்தங்கள் இதுவரைக்கும் கொடுமையான அழிவுகளை கொடுத்து துன்பங்களையும் பதிந்து வைக்கின்ற யுத்தங்கள் எல்லாமே இனமுரண்பாடுகளாலேயே ஏற்பட்டிருக்கின்றன. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தென்னாபிரிக்காவில் ஐ.நா.சபையின் 1வது இனத்துவ மாநாடு இடம்பெற்றது. பின்னர் பல அரசசார்பற்ற நிறுவனங்களால் இந்த மாநாடு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனித சமூகத்தின் அடையாளப்படுத்தல் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. மனிதகுலத்தின் அடையாளப்படுத்தல் புறத்தின் அடிப்படையில் மட்டும் வரைவிலக்கணப்படுத்த கூடியதல்ல. மனிதனின் அகம் சார்ந்த விடயங்களும் மிக முக்கியமாகும். 




வலுவான இனத்துவ அடையாளங்களால் ஜனநாயகமயப்படுத்தல் செயன்முறையானது கட்டியெழுப்பப்படுகின்றது. அந்த வகையில் அதிகாரத்துவ ஆட்சி ஸ்திரப்படாமல் இருக்க பல்இன மக்கள் உள்ள ஒரு நாட்டில் எல்லா இனங்களும் ஏற்கக் கூடிய ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்டாயமாக ஜனநாயக தன்னை வாய்ந்த தலைவராக இருப்பார். ஆகவே பல்இன இனத்துவ சமூகமென்பது அதிகாரத்துவ ஆட்சி உருவாகாமல் இருக்க வழிவகுக்கும். 

அதிகாரத்துவ ஆட்சியானது அடக்கு முறையை பயன்படுத்தும் ஆனால் பல்இன சமூகங்களில் அடக்கு முறையை பயன்படுத்த முடியாது. இது ஜனநாயக கட்டமைப்பினை பாதுகாப்பதாக அமைந்துள்ளது. மேலும் வலுவான இனத்துவ அடையாளங்கள் பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை தடுக்கின்றது. இதன் அர்த்தம் இது ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதாகும். போர்க்குற்றங்களை நடைமுறைபடுத்தாது இருப்பது ஜனநாயகதன்மை வாய்ந்ததாகும். ஜனநாயக அரசியலில் இனத்துவ அடையாளமென்பது ஒரு முக்கிய விடயமாகும். மேலும் தீர்மானமெடுப்பதில் நாட்டின் அனைத்து தரப்பினரும் பங்குகொள்ளல் என்பது ஜனநாயகத்தின் ஒரு பண்பாகும். இனத்துவ முறைமையினால் தீர்மானமெடுப்பதில் அனைத்து தரப்பும் பங்குகொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்டுகின்றன.          
இனத்துவ வேறுபாடுகள் தொடர்பில் ‘ஜே.வி.ஸ்ராலின்’ கூறுகையில், ‘தேசம் என்பது வரலாற்று ரீதியாக கூர்ப்படைகின்றது. உறுதியான சமூகம் மொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு மற்றும் உளவியல் உருவாக்கத்தில் சமூக கலாசாரத்தையும் கொண்டிருக்கும்’ என கூறியுள்ளார். உறுதியான சமூகம், பொதுவான மொழி, குறிப்பிட்ட நிலப்பரப்பு,தனித்துவமான பொருளாதாரம், பொதுவான வரலாறு, பொது கலாசாரம், மதம், பொது பாரம்பரியம், குழுசார் உள்ளுணர்வு, பிறரால் குறித்த குழுவாக அடையாளம் காணப்படல் என்பன இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாட்டை விளக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான அம்சங்களாக காணப்படுகின்றன. 


இந்த அம்சங்களை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு தனித்துவமான இனமாக ஒரு மக்கள் பிரிவு தங்களை அடையாளப்படுத்த முற்படும் போக்கு 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீவிரமாகியது. 1991ல் நடைபெற்ற 37 பாரிய யுத்த முரண்பாடுகளில் 35 உள்நாட்டு யுத்தங்கள் இலங்கை முதல் வட அயர்லாந்து வரை நடந்த உள்நாட்டு யுத்தங்கள் இன முரண்பாடுகளாலேயே ஏற்பட்டனவாகும். மேலும் கனடா, கியூபெக் போன்ற முரண்பாடுகளும் இனவேறுபாடுகளால் ஏற்பட்ட முரண்பாடுகளாகும். இந்த இனத்துவ வேறுபாடுகளும் வகைப்படுத்தல்களும் 1960களின் பின்னர் மிக முக்கிய அம்சங்களாகும். இவ்வாறான இனத்துவ வேறுபாடுகள் ஜனநாயக கட்டமைப்பில் சாதகமான விளைவு களை ஏற்படுத்துவதைப் போல  தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன என்ற கருத்தும் மறுக்கவியலாது. அரசியல் அதிகாரம், வளங்கள்,நிலம், அந்தஸ்து என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள அரசியல் ரீதியாக தங்கள் தனித்துவத்தை நிறுவ வேண்டிய அவசியம் இனத்துவ அடையாளத்தையும் வகைப்படுத்தலையும் முன்தள்ள காரணமாக உள்ளன. 


ஜனநாயகமானது அனைவரையும் சமமாக நோக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை வலியுறுத்துகின்றது. ஆனால் சில சமயங்களில் இனத்துவ ரீதியான வேறுபாடுகள் இந்த ஜனநாயக எண்ணக்கருவை மீறுவதாக உள்ளது. காலணித்துவத்தின் பிற்பகுதியில் இனத்துவ அரசின் தோற்றம் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. இன அடிப்படையில் அரசியல் செய்வதே இனத்துவ அரசியல் எனப்படுகின்றது. உதாரணமாக, இலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் காங்கிரஸ் போன்றவற்றை கூறலாம். இலங்கையில் இனத்துவ அரசியல் என்பது தாம் சார்ந்த இனத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக, ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி என்பவற்றை கூறலாம். இந்த இனரீதியான கட்சிகள் கூடுதலாக பொதுவான பண்பை கொண்டிருக்க மாட்டாது. தம்முடைய இனத்திற்கு பலனளிக்கக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதன் காரணமாக ஏனைய இனங்கள் பாகுபடுத்தப்படுவதனால் முரண்பாடுகள் அதிகமாக ஏற்படுகின்றன.  




இலங்கை இதற்கு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். இலங்கையின் அரசியல் யாப்பினை எடுத்து கொண்டால் யாப்பு எந்தளவு ஜனநாயத்தன்மை வாய்ந்தது என்பது விமர்சன கருத்தாகும். இந்திய யாப்பில் எல்லா மதமும் சமமாக கருதப்படுகின்றது. ஆனால் இலங்கை யாப்பில் பௌத்த மதமே அரச மதமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு முரணாக உள்ளது. இனத்துவ அரசியல் உருவாகக் காரணம் அரசியல் யாப்புக்களில் போதியளவு ஜனநாயகத் தன்மை காணப்படாமையாகும். ஜனநாயத்தன்மை குறைந்த அளவுக்கு உள்ளதோ இனத்துவ அரசியல் அந்நாடுகளில் அரசைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறையாக காணப்படுகின்றது. 

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்து இலங்கையில் உருவாக்கப்பட்ட பொதுக் கொள்கைகள் அனைத்துமே ஒரு இனத்தினை மட்டுமே திருப்திப்படுத்துவதாக அமைந்திருந்தன. தனிச்சிங்கள அமைச்சரவையின் உருவாக்கம், காணிக் குடியேற்றக் கொள்கை, 1956ன் மொழிக் கொள்கை, பல்கலைக்கழக தரப்படுத்தல் முறைமை போன்ற பல விடயங்கள் பெரும்பான்மை இனத்திற்கு மட்டுமே நன்மையை ஏற்படுத்திய அதேவேளை சிறுபான்மை சமூகத்தை பாதிப்பதாகவே அமைந்தது. இவ்வாறான காரணிகளே பிற்கால இலங்கையின் பல உயிர்களை அழித்த பாரிய இன ரீதியான யுத்தத்திற்கும் வழிவகுத்தது. மேலும் ருவாண்டாவை எடுத்து நோக்கினால், அங்கு ஹற்ரு, ருட்சி போன்ற இனங்கள் காணப்பட்டன. பல மில்லியன் மக்களை பலி கொண்ட இனமுரண்பாட்டு வரலாறும் அதற்குண்டு. 


பெரும்பான்மைவாதமானது இன மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கின்றது. இந்த பெரும்பான்மைவாத ஆட்சியானது ஜனநாயகத்திற்கு முரணானது. பெரும்பான்மைவாத ஆட்சியானது ஆட்சியில் உள்ள ஒரு குழு தம்முடைய செயற்பாடுகளை ஏனைய சிறுபான்மை இனத்தினர் மீது திணிக்கின்ற செயற்பாட்டினை மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு முரணாவது மட்டுமன்றி இன ரீதியான வேறுபாட்டையும் ஏற்படுத்துகின்றது. இனத்துவ அரசியலானது ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் கூடுதலாக ஈடுபடுகின்றது எனலாம். அந்த வகையில் இனத்துவ அரசியலின் காரணமாக,

1. அரசியல் ஸ்திரத்தன்மையானது பாதிக்கப்படுகின்றது. ஒரு நாட்டில் யுத்தங்கள் மற்றும் இனரீதியான முரண்பாடுகள் என்பன அரசியல் முறைமையான ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கின்றது. 

2. அரசியல் கலாசாரமானது பாதிக்கப்படுகின்றது. அரசியல் கலாசாரம் என்பதில் மொழி, மதம், மக்கள் பங்கீடு என்பன உள்ளடக்கப்படும். அரசியலில் மதத்தின், மொழியின் தாக்கம் காணப்படுகின்றது, ஆகவே ஜனநாயக அடிப்படையிலான கலாசாரம் பாதிப்படைகின்றது.

3. மேலும் இனத்துவ அரசியலின் காரணமாக அரசியல் வன்முறையை பயன்படுத்தல், பாகுபாடு காட்டல் போன்றன இடம்பெறுகின்றது. இவ்வாறான விடயங்கள் ஜனநாயகத்திற்கு எதிரான விடயங்களாகையால் ஜனநாயகத்தின் உறுதி நிலை பாதிப்படைகின்றது.

மேலும் இனத்துவ அரசியலானது மாநில அடிப்படையில் இனங்களாக பிரிந்து செயற்படுகின்றது. இதற்கு இந்தியா சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். இந்தியாவில் மாநில கட்சிகளாக மணிப்பூர், நாகலாந்து, அருணாசல பிரதேசம், மிசோரம் என்பன உள்ளன. இருந்தும் தேசியம் என்ற வகையில் இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்கள் கூடுதலான தேச உணர்வு கொண்டவர்கள் என்பது யாவரும் ஏற்றுக் கொண்டதொரு விடயமாகும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் ஒரு ‘இந்தியன்’ என்ற உணர்வு அதிகமாகவே காணப்படுகின்றது. இந்தியாவில் இன ரீதியான கட்சிகள், வேறுபட்ட மொழிகள், இனங்கள் மதங்கள் என்பன காணப்பட்டாலும் தாம் ‘இந்தியன்’ என்ற உணர்வும் தேச பக்தியும் இந்திய ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கு துணையாக அமைந்துள்ளன. 




இலங்கையை பொறுத்த வரையில் தேச உணர்வு என்பது மக்களிடம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையில் ஒரு பௌத்த சிங்களவர் மட்டுமே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற தீர்மானங்கள் இனரீதியான வேறுபாட்டை காட்டுவது மட்டுமன்றி ஜனநாயகத்தை வளர்ப்பதிலும தடையாக உள்ளது எனலாம். இலங்கையை விடவும் இந்திய மற்றும் அமெரிக்க ஜனநாயக கட்டடைப்பானது வலுவானதாக காணப்படுகின்றது. 
இனமுரண்பாடுகள் ஒரு இனத்தை மேன்மை இனமாகக் காட்டி மற்றைய இனத்தை இழிவுபடுத்துகின்றது. இதனால் மேனிலையில் உள்ளவன் இலாபமடைகின்றான். கீழ்நிலையில் உள்ளவன் ஒடுக்கப்படுகின்றான். இதன்மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்பட்டு ஜனநாயக அமைப்பு பாதிக்கப்படுகின்றது. 


இனத்துவ அரசியலின் காரணமாக இன்று கூடுதலான நாடுகளில் தேசத்தை கட்டியெழுப்பல் செயன்முறைமையானது பாதிப்படைந்துள்ளது. எல்லோரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் ஆனால் இன வேறுபாடுகள் காரணமாக ஜனநாயகம் தன்னுடைய ஸ்திரத்தன்மையை இழந்து வருகின்றது. இனவேறுபாடுகள் செயலூக்கம் உடையவையாகும். ஜனநாயகத்தின் பெயரில் சொல்லும் பொய்யையும் வர்க்க சர்வாதிகாரத்தையும் அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தம் கையில் அதிகாரத்தை பெறுவதே ஜனநாயகமாகும். இனவேறுபாடு என்பதும் அதன் இருப்பும் ஸ்திரமான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் சாதகமாக உள்ளதுடன் தடையாகவும் அமைந்து காணப்படுகின்றது. நாடுகளில் ஜனநாயகம் ஸ்திரமாக இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 




ஆக்கம்
யாழினி சரண்யா
4ம் வருடம்
அரசியல்த்துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்






4 கருத்துகள்:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites