வியாழன், 11 ஆகஸ்ட், 2011

அடுத்த தலைமுறை ???.... (சிறுகதை)


'அப்பா எழும்புங்கோவன் பிள்ளைக்கு நேரஞ்செண்டு போச்சு....இதுக்குத்தான் இரவிரவா கொம்பியூட்டருக்கு முன்னால கொட்டக்கொட்ட முழிக்காதையுங்கோ எண்டு சொன்னனான்........இப்ப எழுப்ப எழும்பிறியளில்லை

வீட்டுக்குள் போட்டிருந்த வெப்பமாக்கியையும் மீறி பனிக்காலக் காலைக் குளிர் உடலினைச் சில்லிட வைத்தது. இறுக்கப் போர்த்திருந்த போர்வையைப் பிடித்திளுத்தவளின் மேல் கோபமாய் வந்தது அவனுக்கு. 

'காலங்காலத்தால உன்ர சுப்ரபாதத்தத் தொடங்காத..........பொறு வாறன்..'




எரிச்சலுடன் எழுந்து கண்ணைக் கசக்கியபடி கையில் கட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்தான்.நேரம் ஐந்து மணி.யன்னல் சீலையை விலக்கி வெளியே எட்டிப்பார்த்தான். அந்த அடுக்கு மாடி அறையின் யன்னல் வழியே மொன்ரியல் நகரின் பிரதான பாதைகளில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த வாகன வரிசைகள் அழகாகத் தெரிந்தன. கோப்பியை நீட்டியவளின் கையிலிருந்து அதை வாங்கி நிதானமாக அதை உள்ளிழுத்தான்.

'எண்டாலும் ஊரில குடிக்கிற பிளேன்ரீ மாதிரி வராது...' பெருமூச்சுடன் கூறியபடி இன்னொரு வாயை உள்ளிழுத்தான்.

'ஓமோம் வந்து மூண்டு வருசமாச்சு வீடு வாங்குவம், பிள்ளைய நல்லாப் படிப்பிப்பம், அந்தக் கதையில்லை. இன்னும் ஊர்க் கதைதான்'

 அவளும் பதிலுக்கு ஒரு பெருமூச்சு விட்டாள்.

'நிதுஷா வெளிக்கிட்டாளே?' கட்டிலில் இருந்து எழுந்தபடி மனைவியின் கதைப் போக்கைத் திசை திருப்பினான்.

'ஓமோம் அவள் அப்பவே வெளிக்கிட்டு நிக்கிறாள் கெதியா வாங்கோ.'

குளியலறைக்குள் சென்று சூடான நீரையும் குளிர் நீரையும் கலந்து திறந்து விட்டு ஷவரின் கீழ் நின்றான். ஆமாம் அவள் சொல்வதும் சரிதான். என்னதான் நடந்தாலும் அவன் மனது சின்ன வயசில் வாழ்ந்து வளர்ந்த ஊரை விட்டு விடுபடவில்லை. காலைக் குளிருடன் கிணற்று நீரை வாரித் தலையில் இறைத்தான் என்னமாய் இருக்கும்! ...இங்கு வந்ததிலிருந்து வெந்நீர் தான்....... உடம்புக்கு எல்லாம் பழகி விட்டது........ஆனால் மனசுக்கு?.....

குளித்து விட்டு வந்தவன் உடைகளையும் மாற்றிவிட்டு வெளியே வந்தான். 'அப்பா குட் மோர்னிங்' என்று குதூகலித்துக் கத்திய மகளை அணைத்துக் கொண்டான்.

'நிதுக்குட்டி இன்னும் ஜக்கெட் போடேல்லயோ?..வெளியில குளிருமே?' என்றபடி அவளை விடப் பெரிதாக இருந்த குளிர் கால மேலாடையைப் போட்டு விட்டான். பின்னர் துப்பட்டாவை எடுத்து கழுத்தினுள் குளிர் போகாதவாறு கவனமாக மூடிக் கட்டி விட்டான்.

'சிறி லங்காவில குளிராத அப்பா?' எப்பொழுதும் கேள்விகளுடன் தயாராக இருக்கும் தன் சின்ன மகளின் கேள்வியைக் கேட்டு சிரித்தான்.

'இல்ல அங்க ஸ்னோ எல்லாம் இல்லைத்தானே? மழைக்காலம் மட்டும் தான்..இப்பிடிக் குளிராது'

'அப்ப ஏன் நாங்க இங்க வந்தனாங்க?'

'அங்க சண்டை' என்றபடி தனது கோட்டையும் போட்டுக் கொண்டு 'கலா போயிட்டு வாறம்' என்று சமையலறையில் நின்ற மனைவிக்குக் குரல் கொடுத்துவிட்டு மகளையும் தூக்கிக்கொண்டு வெளியேறினான்.

சற்று நேரம் ஏதும் பேசாமல் வந்த நிதுஷா திடீரென 'ஏனப்பா சண்டை?' என்று கேட்டாள். அவன் என்ன சொல்வதென யோசிப்பதற்குள் மீண்டும் 'என்ன சண்டையப்பா?' என்றாள்.

'நீங்கள் ஸ்கூல்ல பிள்ளையளோட பிடிக்கிற மாதிரி சண்டை தான்'

 'சொக்கிளேற்றுக்கா அப்பா?'

'இல்லையம்மா'

'அப்ப?'

'தமிழீழத்துக்கு'

'அப்பிடியெண்டா?'

'அது இப்ப நிதுவுக்கு விளங்காது. இப்ப கனக்க கேள்வி கேக்க கூடாது. நாங்க முதல் டக்ஸி ஒண்டு பிடிப்பம்.'

குளிரில் நடந்து போவது சாத்தியமில்லையென்று வாசலால் வெளிப்பட்டவுடன் அவன் புரிந்து கொண்டான். பனிவாரும் வண்டி வீதியின் இரு கரைகளிலும் ஓரடி உயரத்திற்குப் பனியை இறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தது.சற்று நேரத்திற்கெல்லாம் சப்பாத்தினுள் பனி புகுந்து கால் விறைக்கத் தொடங்கியது. ஈரப் பசையற்ற குளிர் காற்று முகத்தில் அறைந்தது.அவசரமாக ஒரு டக்ஸியை வழிமறித்து ஏறினான். வாகனத்தினுள் வெப்பக்காற்று முகத்தில் பட மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது. பாவம் பிள்ளை! குனிந்து குளிர்ந்து போயிருந்த அவளது கன்னங்களைத் தடவிக் கொடுத்தான்.

'அப்ப நான் ஸ்கூலுக்குப் போறான் தானே அப்பா?'

'என்ன?' அவள் கெட்ட கேள்வியின் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு.

'அப்ப ஏன் நீங்க சிறி லங்காவை விட்டிட்டு வந்தனீங்க?'

'அது அங்க பெரிய சண்டை. இருக்கேலாது.'


' அம்மம்மாவும் தாத்தாவும் இருக்கினம்?'

'அவையளுக்கு வர விருப்பமில்லை'

'அவையளுக்கு ஊர்தான் விருப்பம்'

'அப்ப உங்களுக்கு விருப்பமில்லையா அப்பா?'

'எனக்கும் வர விருப்பமில்லைத் தான். நானும் அம்மாவும் நிதுக் குட்டிக்காகத் தான் இங்க வந்தனாங்க.'

'நீங்களும் சண்டை பிடிச்சனீங்களா அப்பா?' அவள் சற்றுப் பொறுத்துக் கேட்டாள்.

'இல்லை'

'அப்ப யார் பிடிச்சது?'

 'புலியும் ஆமியும்'

'புலியெண்டா என்னப்பா?'

 'எல்லா நேரமும் இப்பிடிக் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.அப்பாவுக்குக் கோவம் வரும்'

டக்ஸி ஓட்டுனரின் கணக்கைப் பத்து டொலர் கொடுத்துத் தீர்த்து விட்டு அவளைப் பாலர் பாடசாலை வாசலில் கொண்டுபோய் விட்டான்.

'அப்பா பின்னேரம் வருவன்.தொப்பி கிளவுஸ் எல்லாம் கீழ போட்டிட்டு துலைஞ்சு போச்சு எண்டு சொல்லக் கூடாது என்ன? கவனமா வச்சிருக்க வேணும்.'

குளிர் காரணமாக அவளது கண்ணால் வழிந்திருந்த நீரைத் துடைத்து விட்டு அவளது கன்னத்தில் முத்தமிட்டான். கன்னம் சில்லென்றிருந்தது.

 'அப்பா போயிட்டு வாறன் என்ன?'

தூரத்தில் வருமட்டும் கையசைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்து பெருமூச்சொன்று விட்டான். அவன் கண்கள் கண்ணீரினால் நிறைந்தன.இது குளிர் காரணமாக வழியும் கண்ணீரல்ல....மனத்தின் கணம் காரணமாக வழியும் நீர்!



ஆக்கம்
அரசி.வி
முதலாம் வருடம்
கொழும்புப் பல்கலைக்கழகம்.

1 கருத்து:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites