வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

காஷ்மீர் ஒரு வரலாற்றுப்பார்வை

   
ஜம்முகாஷ்மீர்பிரதேசம் 217000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட பிரதேசம். இதைவிட சிறிய நாடுகள் 93 உலகில் உள்ளன. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதி 1,35,000 சதுர கி.மீ பகுதியாகும். 1962இல் இருந்து சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 35,000சதுர கி.மீ நிலமும் இதில் உள்ளடங்கும். ஆஸாத் காஷ்மீர்எனும் 11,000 சதுர கி.மீ நிலம் மறைமுகமாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர கில்கித் பல்திஸ்தான் எனும் 71000 சதுர கி.மீ பகுதி பாகிஸ்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவை அத்தனை பகுதிகளுமாக காஷ்மீரின் சனத்தொகை 13.5 மில்லியன்களாகும். இது உலகிலுள்ள 177 நாடுகளின் சனத்தொகையையும் விட அதிகமானதாகும்.

இந்திய ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் 8.5மில்லியன் மக்களும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள அஸாத் காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தான் பகுதிகளில் முறையே 2.5மில்லியன் 1 மில்லியன் மக்களும் வாழ்கின்றனர். இவர்களுள் 77 வீதமானவர்கள் முஸ்லிம்கள், 20 வீதமானவர்கள் இந்துக்கள்,ஷீக்கியர்கள் பௌத்தர்கள் கிறீஸ்தவர்கள் 3 வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
1579இல் முகாலயர்களின் ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் இருந்தது. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1819லிருந்து காஷ்மீரை ஆக்கிரமித்த ஷீக்கியர்கள் 1846இல் அதனை பிரித்தானியாவிடம் ஒப்படைக்கும் வரை ஆண்டு வந்தனர் .1819ம் ஆண்டு காஷ்மீரை ஆக்கிரமித்த சீக்கியர்கள் 1846ம் ஆண்டு வரை ஆண்டு வந்தனர். இவர்களது வன்முறை நிறைந்த கொடூரமான ஆட்சியில் முஸ்லிம்கள் பல்வேறு அடக்கு முறைகளுக்கும் அநியாயங்களுக்கும் உட்பட்டனர். 1846 இல் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு காஷ்மீரைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. பிரித்தானியர்கள் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தான் சீனா என்பவற்றிற்குமிடையில் ஒரு தாங்கு அரசை (Buffer state) உருவாக்குவதற்கே காஷ்மீரை ஆக்கிரமித்திருந்தனர்.
1947ம் ஆண்டு வரை இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியர்களின் ஆளுகையின் கீழ் இருந்த போதிலும் 1846 முதல் 1947 வரை இந்துக்களே காஷ்மீரை மாறி மாறி ஆண்டு வந்தனர். 77% முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாட்டில் 20%  மான இந்துக்கள் ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சியாளர்களாக இருந்தமை உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் நிகழ்வாகும்.
1947 இல் பிரித்தானியா இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிய போது பிரித்தானியாவின் நேரடிக் கண்காணிப்புக்குட்பட்ட "பிரித்தானியா - இந்தியா"(British-India) எனவும் ஏனைய 565 பிராந்தியங்கள் இளவரச மாநிலங்கள் எனவும்  (Prince state) இந்தியா இரு கூறுகளாக இருந்தது. அப்போது காஷ்மீர் இந்த 565 மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது. 1947 ஓகஸ்ட் 15ம் திகதி பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உலகப்படத்தில் சேர்ந்து  கொண்டது.
பிரித்தானியா இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிய போது இவை ஒவ்வொன்றும் சுதந்திரப் பிராந்தியங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டதோடு இந்தியா பாகிஸ்தான் எனவும் இந்திய  துணைக்கண்டம் பிரிக்கப்பட்டது. மேலும் இந்த மாநிலங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் தாம் விரும்புகின்ற நாட்டுடன் இணைந்துகொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டது. எனினும் காஷ்மீருக்கு மட்டும் இச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் நிலவிய போதும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 
 



காஷ்மீர் நெருக்கடியும் இந்தியாவும்.
1947 இல் காஷ்மீரில் ஆட்சியாளராக இருந்தவர் மகாராஜா ஹரிசிங். இவர் முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட அப்பிரதேசத்தை இரு நாடுகளில் எதனுடன் இணைத்துக்கொள்வது என்பது பற்றி அக்கறை இன்றி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் பெரும் கலவரம் ஒன்றை நடாத்தி ஹரிசிங்கை விரட்டியடித்தனர். தமது பிரதேசம் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியிலிருந்து விடுபட்ட பிரதேசம் எனக்குறிப்பிட்ட கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெவித்தனர்.இதனால்  ஆட்சியாளரான மகாராஜா  தனது தலைநகரான  ஸ்ரீ நகரை விட்டு தப்பியோடிய பிற்பாடு கலவரத்தை அடக்க இந்தியாவிடம் படையுதவி கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதற்காக இணைப்புப் பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இந்தியா உதவி செய்ய முன்வந்தது. மகாராஜாவும் எவ்வித மறுப்பும் இன்றி கைச்சாத்திடவே 1947 ஒக்டோபர் 27 இல் இந்தியா தனது துருப்புக்களை காஷ்மீர் மண்ணில் குவித்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானும் தனது படைப்பிரிவுகளை காஷ்மீருக்கு அனுப்பியது. இந்தியாவுடன் காஷ்மீர் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட இத்தீர்மானத்தை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பிரகடனத்திற்கு எதிராக அவர்கள் போராடத்தொடங்கினர். இச்சந்தர்ப்பத்திலேயே இந்தியாவை விட  காஷ்மீர் மீது பல்வேறு வகைகளிலும் இணைத்துக்கொள்வது பற்றி பாகிஸ்தானும் உரிமை கொண்டாடத் தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தகராறு ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது.
சுதந்திரம் பெற்ற இரு நாடுகளும் (இந்தியா பாகிஸ்தான்) அதனைப் பெற்ற ஒரு வருடம் பூர்த்தியடையுமுன் தீர்க்கப்படாத எல்லைப் பிரதேசம் சம்பந்தமாக யுத்தத்தில் ஈடுபட்டனர். 1948 December30 இல் இரு நாடுகளும் யுத்த நிறுத்தத்தில் உடன்பட்ட போது ஆஸாத் காஷ்மீர் பிரதேசத்தில் பாகிஸ்தான் தனது அதிகாரத்தை நிலைநாட்ட மற்றைய பிரதேசத்தில் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. ஆனால் இதுவரை எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் எல்லையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவே காஷ்மீர் பிரச்சினையின் அடிப்படையாகும்.
 இந்திய துருப்பினருக்கு எதிராகப் போராடிய முஜா ஹதுக்கள் அப்போதே 32000 சதுர மைல் பரப்பைக் கொண்ட ஒரு பகுதியை மீட்டெடுத்தனர். இது ஆஸாத்  காஷ்மீர் (சுதந்திர காஷ்மீர்) எனப்படுகின்றது. காஷ்மீர் விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்தியா இப்பிரச்சினையை .நா சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து உதவி கோரியது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துமாறு இந்தியாவை .நா சபை பணித்தது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இச் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துவதாக உறுதியளித்தார். எனினும் அது இன்று வரை நடைபெறவில்லை.
1957 இல் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துமாறு கோரிய .நா சபையின் தீர்மானத்தை இந்தியா தட்டிக்கழித்ததோடு மீண்டும் காஷ்மீரில் தனது இராணுவ வியூகத்தை இரட்டிப்பாக்கியது. வன்முறைகளையூம் அக்கிரமங்களையூம் கட்டவிழ்த்த இந்தியா தொடர்ந்து வந்த காலங்களில் காஷ்மீர் பிரச்சனையை தனது ராஜதந்திரத்தினால் சர்வதேச சமூகத்திற்கு ஒரு உள்நாட்டு விவகாரமாக காட்டவே முயன்றது. 1947 இல் இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்ததில் இருந்து தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு நுட்பமான வழிகளைக் கையாண்டு வந்தது. அங்கு செயற்பட்டு வந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களை அடக்குவதற்கு பல தந்திரோபாயங்களை இந்தியா பின்பற்றிய போதும் காஷ்மீர் மக்கள் புதுடில்லியின் கீழ் அமையும் மாநில அரசை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். தாம் அடக்கியாளப்படுவதை எதிர்த்துப் போராடுகின்றனர். இதன் விளைவாக பூலோக சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர் கடந்த நான்கு தசாப்தகால ஆக்கிரமிப்பினால் பூலோக சுடுகாடாய் மாறிவருகின்றது.


மத்திய அரசிடம் ஒமர் எதிர்பார்ப்பது என்ன? காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மத்திய அரசிடம் இருந்து கீழ்கண்ட விஷயங்களை எதிர்பார்க்கிறார்.
  •  காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டத்தை ஆறு மாவட்டங்களில் வாபஸ் பெற வேண்டும்.
  •  சரண் அடையும் பயங்கரவாதிகளுக்கு வேலைவாய்ப்பு, மறுவாழ்வு பணிகள் செய்து தரப்பட வேண்டும்.
  •  படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
  •  கலவரம் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
  •  அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த வேண்டும்.
  •  அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவை காஷ்மீருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

முடிவுரை
வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை.  இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு 1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள் இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல்காணாமல்போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும் இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால் கொலையும் கொள்ளையும் பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites