புதன், 11 ஏப்ரல், 2012

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் சகபாடிகளின் பங்களிப்பு





“நவில்தொறும் நூனயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு”

இது ஐயன் வள்ளுவன் சொன்ன வாய்மொழி. படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல பழகப் பழக எம் மனதிற்கும் வாழ்விற்கும் இன்பம் தரவல்லது நட்பு.

“உன் நண்பனைப் பற்றிச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்லுவேன்” 

என்பதும் எல்லோராலும் பெரும்பாலும் கூறப்படுகின்ற கூற்றுத்தான். இந்த மண்ணில் பிறந்த மனிதரில் எதிரிகள் இல்லாமல் யாரும் மடிந்திருக்கலாம் ஆனால் நண்பன் இல்லாமல் யாரும் வாழ்ந்தார்களா? என்பது வியப்புக்குரிய வினாவாகத்தான் அமைந்து விடுகின்றது.





“உலகில் மிகப்பெரும் ஏழை நண்பனில்லாதவன்” என்னும் திரைப்பாடலின் வரி எவ்வளவுஅருமையாக நட்பின் மேன்மையை உணர்த்தி நிற்கின்றது.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே அது
நல்லவராவதும் தீயவராவதும் 
அன்னை வளர்ப்பதிலே…”

 என்று பாடல் கூறுவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே, ஆனால் ஒரு மாணவப்பருவத்திலே அந்த மாணவனின் ஆளுமை வளர்ச்சியில் பெரும் பங்காற்றுபவன் நண்பனே. ஒரு மாணவன் தன் பெற்றோருடனோ ஆசிரியருடனோ மற்றும் ஏனைய தன் சகோதரர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ செலவிடும் நேரத்தை விட அதிகமான நேரத்தை தன் உடன் பயணிப் போனான தன் சகபாடிகளுடனேயே செலவிடுகின்றான்.

தன் தாயிடம் பகிர்ந்து கொள்ள முடியாத பல விடயங்களை தனது நண்பனிடமே பகிர்ந்து கொள்கிறான். தன் உணர்வெழுச்சிகள், இரகசியங்கள், எதிர்காலத்திட்டங்கள், ஆசைகள், ஏக்கங்கள், கனவுகள், இலட்சியங்கள் குறிப்பாக தனது வெற்றிகள் தோல்விகள் அனைத்தையும் தன் நண்பன் ஒருவனிடம் மட்டுமே அவன் பகிர்ந்து கொள்கிறான் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது எனலாம். அந்த வகையிலே ஒருவனது நிறை குறைகளையும், ஆற்றல் திறமைகளையும் நன்கு அடையாளம் கண்டு கொள்பவர்கள் அவனது நண்பர்களே. ஒரு வகுப்பறையிலே சென்று
 “உங்களுள் கவிதை எழுதக் கூடியவர்யார்?
கதை சொல்லக் கூடியவர் யார்?
நன்றாக வாசிக்கக் கூடியவர் யார்?"

என்று கேட்டால் எந்தவொரு மாணவனும் முதலில் தன்னை அடையாளப்படுத்தி முதன்மைப் படுத்தியிருக்க மாட்டான் மாறாக தன் சக பாடியையே அடையாளம் காட்டி நின்றதனை ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் தமது பாடசாலைக் காலத்தில் கண்டு, கடந்து வந்த சம்பவங்களாக இதனைக் கூறலாம்.

இன்றைய நவீன காலத்திலே குகனைப் போல கர்ணனைப் போல காவிய நண்பர்களைக காணமுடியாத போதிலும் 
“உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு” 

                என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப விழும் போது தாங்கிக் கொள்ளும் நட்பும் தோற்ற போது தேற்றிய நட்பும் இன்றும் ஆங்காங்கே அரிதாக வாழப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஆளுமை என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊற்றெடுக்கும் அற்புத, அதிசய நீர்வீழ்ச்சி.அதன் தொடக்கத்தை நீ கண்டு கொண்டால் போதும் அது உன்னை வெற்றி சமுத்திரத்திலே, சமூகத்தின் சிகரத்திலே, புகழின் உச்சியிலே உன்னை ஏற்றிவிடும். அவ்வாறாக ஒருவன் சாதனை நிலை நாட்ட அவனது ஆற்றல் திறமைகளை வெளிக்கொணர கரம் தந்து உதவுபவன் நண்பன் ஒருவனே.


ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் எம் சாதனைக்கு வழிகாட்டிகளாய் வழிசமைத்துத் தருவோராய் அமைந்தால் அது சாதனையைத் தரும். மாறாக அவனே எம் வழிகளில் படு குழிகளை அமைப்பானாயின் அது சோதனையாக மாறிப்போகும்.

“யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல் வேண்டும் - யானை
றிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மேய்யதா வால் குழைக்கும் நாய்”

என்பதனூடாக யானை தன் பாகனையே கொன்றுவிடும். தன் எஜமான் எய்த வேல் உடலில் பாய்ந்து இரத்தம் வழிகின்ற போதும் நாயானது தன் வாலை ஆட்டி தனது அன்பை வெளிப்படுத்தி நிற்கும். என நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை நாலடியார் வலியுறுத்துவதனைக் காணலாம்.

ஒரு மாணவனது ஆளுமை வெளிப்பாட்டில் அவனது குடும்பமானது பாடசாலையினையே நம்பியிருக்கின்றது. பாடசாலையில் ஆசிரியரின் வழிகாட்டல்கள் அவனது ஆளுமைகளில் திருப்பு முனைக்கான, வளர்ச்சிக்கான தூண்டல்களை மட்டுமே வழங்க முடியும். ஆனால் ஒரு மாணவனது வெற்றிகரமான ஆளுமை வெளிப்பாட்டிற்கு அவனது சகபாடியின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றே எனக் கூறலாம். பாடசாலைகளிலிருந்து படிப்பறிவற்றவர்கள்  ஒழுக்கம் தெரியாதவர்கள் என்று விலத்தப்பட்டவர்கள் இன்று எமது வாழ்விலிருந்து விலத்திவிட்டுப் பார்க்க முடியாதளவிற்கு வரலாற்றிலும் எம் வாழ்விலும் விரும்பியோ விரும்பாமலோ தமது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் பலரைக் குறிப்பிடலாம் சில எடுத்துக்காட்டுக்களாக: தோமஸ் அல்வா எடிசன், பெருந்தலைவர் காமராஜர்,ஆபிரகாம் லிங்கன் போன்றோரைக் குறிப்பிடலாமென்றாலும் இவர்களின் இமாலய வெற்றியின் பாதையைத் திரும்பிப் பார்த்தால்; இவர்களது நண்பர்களுக்கு மிகச் சிறந்ததோர் இடம் இருக்கும்.




நாம் எதற்காக? எப்படி? யாரோடு? நட்புக் கொள்கின்றோம் என்பதனை ஒவ்வாரு மாணவனும் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. நண்பனின் வெற்றியின் போது தட்டிக் கொடுப்பதும் தோல்விகளின் போது தோள் கொடுப்பதும் உண்மையான நட்பில்லை; மாறாக நண்பன் தவறு செய்யும் போது அதனைச் சுட்டிக்காட்டுவதும் அவனை நல்வழிப்படுத்த முயல்வதும் தான் உண்மையான நட்பு. இதனையே வள்ளுவனும்
 “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு” 
 எனக் கூறுவதிலிருந்து மிகத் தெளிவாகின்றது.

அத்தோடு ஆளுமை வளர்ச்சியிலே சகபாடியின் பங்களிப்பை நோக்கும் போது இன்றைய கால சூழ்நிலையிலே நவீன கலாசாரமும், போதைப் பொருட்களின் பாவனையும், தொடர்பாடல் முகநூலும் (Face book) ,இணையத்தளமும், கைத் தொலைபேசியின் தொலைக்கவே முடியாத ஆதிக்கமும் மாணவர்களது ஆளுமையை மறைகோட்டிலே நகர்த்தி; பாதாளம் நோக்கி பாதை காட்டுகின்றது. எனவே இத்தகைய இக்கட்டான காலத்திலே எமது ஆளுமைகள் வளம் பெற வேண்டுமாயின் உங்கள் சக பாடிகளை நல்லவர்களாக அனைத்திலும் வல்லவர்களாகத் தேர்ந்தெடுங்கள்.

“Friendship is the icing on the cake of life”  என்பார்கள் அதற்கேற்ப உங்கள் வாழ்வை நட்பால் அழகுபடுத்திக் கொகள்ளுங்கள்.

“We can eat and drink together
we can talk and laugh together
enjoy the life together
but.........
we are only real friends
when you also cried together.” 

என்பதற்கிணங்க உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டுகொண்டு நல்ல சகபாடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

“நண்பனுக்காக உயரைக் கொடுப்பதை விட 
மேலான அன்பு யாரிடமும் இல்லை” 
என்கிறது விவிலியம். காவிய புருஷர்கள் தெய்வங்களை நண்பராக்கினர், முடியுடை வேந்தனைத் தோழராக்கினர்.

மாணவர்களே! 
                       உங்கள் சகபாடிகளை நம்புங்கள் உங்களால் “காற்றிலேறி விண்ணையும் சாட முடியும்”. உங்கள் முதுமையிலே பள்ளி நாட்களை நினைவேட்டின் பக்கங்களில் புரட்டிப் பார்க்கும் போது அங்கே பொறிக்கப் பட்டிருக்கும் அழகான, ஆழமான, அற்புதமான நட்புக்கள் அந்த நினைவுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும். இளமையின் வேகம் முட்டி மோதும். 



மாணவர்களே! இளைஞர்களே! நீங்கள் பலரது வரலாற்றைப் படித்திருப்பீர்கள், ஆனால் நல்ல நண்பர்களைத் தேர்ந்து கொள்ளுங்கள், அப்போது உங்களைப்பற்றி நாளைய தலைமுறை படிக்கும்.



றோ .பெ.றொஷான்

தமிழ் (சிறப்பு 3ம் வருடம்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 



4 கருத்துகள்:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites