வெள்ளி, 2 செப்டம்பர், 2011

க.பொ.த சா/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2010.



ஒவ்வொரு மனித உயிர்களினதும் அடிப்படை உரிமையாகக் கல்வி காணப்படுகின்றது. ஆனால் பல சிறார்களுக்கு இவ் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாது பறிக்கவும்படுகின்றது.  இன்னும் சில நாடுகளில் அரசியல் இழுபறிகள், உள்நாட்டு குழப்பங்கள், சுயநலம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் போன்றவற்றாலும் இவ் அடிப்படைக் கல்வியானது  இன்று பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது.


இதற்கு எமது நாடும் விதிவிலக்கானதல்ல. இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் நாளுக்கு நாள் பறிக்கப்படலாம். இன்று காண்பவை கூட நாளை தடயமற்று மறையலாம். இருப்பவற்றை இழக்கவும் நேரிடலாம். ஒன்றைத்தவிர அதுவே கல்வி.

வன்னியில் நடைப்பெற்ற இறுதி யுத்தத்தினால் அகதிகளாகி புனர்வாழ்வு  முகாம்களில் பல மாதக்கணக்காக முடங்கிக் கிடந்த பலர் அண்மைக்காலமாக மீள் குடியேற்றம் என்ற பெயரில் ஆங்காங்கு நடைபிணங்களாகக் குடியேற்றப்பட்டுள்ளனர். மீள் குடியேற்றப்பட்ட மாணவர்கள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தளரா நம்பிக்கையூடன் தமது கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.


அவர்களின் தேவைகள் எண்ணிலடங்காதவையாக இருந்த போதிலும் அவ்வின்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பயணிக்கும் மாணவர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் ஓர் முயற்சியாக கொழும்புப் பல்கலைகழகத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கலைப்பீட மாணவர்களினால் முல்லைத்தீவு மாவட்டதிலுள்ள துணுக்காய்க்  கல்வி வலயத்தில் சென்ற வருடம் க.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான செயலமர்வு  கார்த்திகை மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை தமிழ், கணிதம், விஞ்ஞானம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை உள்ளடக்கி சிறப்புற நடாத்தப்பட்டது. துணுக்காய்க் கல்வி வலயத்தை எடுத்து நோக்கும் போது க.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைக் கொண்ட 19 பாடசாலைகள் அங்கு காணப்படுகின்றன. இப்பாடசாலைகள் 4 நிலையங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு இச்செயலமர்வு இடம்பெற்றது. இந்நான்கு நிலையங்களாக,

1.    மு/மல்லாவி மத்திய கல்லுரி

2.    மு/மாங்குளம்  மகா வத்தியாலயம்

3.    மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்

4.    மு/பாண்டியன்குளம் மகா வித்தியாலயம்
போன்றவை தெரிவு செய்யப்பட்டன.


இதில் சுமார் 650 மாணவர்கள் கலந்து கொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் அகவணக்கத்துடன் எமது கலாசாரம், பண்பாடுகளின் பிரதிபலிப்பாக அமைந்திருந்தது.

மு/மல்லாவி மத்திய கல்லூரியில் ஆரம்ப நாள் கணித செயலமர்வை துணக்காய்க்  கல்வி வலயப் பணிப்பாளர் திரு. மேகநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் க.பொ.த சா/த பரீட்சை மாணவர்களின் வாழ்வில் வகிக்கும் முக்கியத்துவத்தையும்,அப்பரீட்சையில் சித்தியடைவதற்குரிய வழிமுறைகளையும், நெறிப்படுத்தல்களையும் விளக்கிக் கூறியதோடு செயலமர்வின் ஒருங்கிணைப்பாளர்களான கலைப்பீட மாணவர்களை வாழ்த்தி நன்றி தெரிவித்து செயலமர்வை சிறந்த முறையில் ஆரம்பித்து வைத்தார். இவ்வாறாக குறிப்பிட்ட மற்றைய நிலையங்களிலும் பங்கு பற்றிய பாடசாலை மாணவர்களின் அதிபர்கள் செயலமர்வின் ஆரம்ப நாள்களில் அங்கு பிரசன்னமாகி வைபவ ரீதியாக செயலமர்வை ஆரம்பித்து பல்கலைகழக மாணவர்களுக்கு உற்சாக மூட்டினர்.

இச்செயலமர்வின் போது பெயர் குறிப்பிடப்படாத சில நலன் விரும்பிகளின் உதவியுடன் பெறப்பட்ட பாடசாலை அடிப்படைக் கற்றல் உபகரணங்கள் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. செயலமர்வின் இறுதி நாளான 12ம் திகதி கொழும்பு பல்கலைகழகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அவர்கள் நேரடியாகக் குறிப்பிட்ட அந்த 04 நிலையங்களுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களது பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தம்மாலான கல்வி உதவிகளை தமிழ்ச்சங்கத்தின் மூலம் தொடர்ந்தும் வழங்குவதாக வாக்களித்தார்.


இறுதி நாள் 12 ஆம் திகதி 4.00 மணியளவில் துணுக்காய்க் கல்வி வலயத்தில் சென்ற வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் மு/ மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது சித்தியடைந்த மாணவர்களுக்கான  ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தலைவர் தலைமையில் இனிதே நிகழ்வுற்று நிறைவுற்றது.



அங்கு நாம் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயம் யாதெனில் அண்மையில் வெளியான .பொ. சா/ பரீட்சை பெறுபேறுகளின் படி இத் துணுக்காய்க் கல்வி வலயத்தில் 9A  ,8A  ,7A   போன்ற பெறுபேறுகள் முறையே யோகபுரம் மகா வித்தியாலயம், பாலிநகர் மகா வித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டது எம்மை மெய் சிலிர்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது கல்வியை எவைவும் அசைத்து விட முடியாது என்பதையும் உணர்த்துகின்றது. அதேபோல் கணிதம், விஞ்ஞானம், போன்ற பாடங்களிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்தது அக் கல்வி வலயத்துக்கு ஓர் வரலாற்றுத் திருப்பமாக அமைந்ததை எவரும் மறுக்க முடியாது.

இவ்வாறான சமூக நல செயலமர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இத் துணுக்காய் கல்வி வலய செயலமர்வு  ஓர் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அதேவேளை இச் செயலமர்வுக்கு பேருதவி செய்த திரு. ராஜன் அவர்களுக்கும் திரு. ஆறுமுகம் லோகேஸ்வரன்; (ரபீனாஸ்) அவர்களுக்கும் செல்வி. பாமினி சிவஞானம்  அவர்களுக்கும் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

(கொழும்புப் பல்கலைக்கழக “இளந்தென்றல் 2011 ” சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites