செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள்

e


உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள், திட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972ல் சார்ளஸ் மரியன் (Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது.


பொதுக்கொள்கை தொடர்பில் வை.றோ (Y.Drow) என்பவர் கூறுகையில் கொள்கை என்பது பின்பற்ற வேண்டிய ஒரு செயற்பாடு தொடர்பான மூலமாதிரி ஒன்றினை அடிப்படை, அடித்தளமாக கொண்ட செயற்பாடு ஒன்றாகும் என்று கூறினார். மேலும் தோமஸ் டை (Thomas dye) யின் கருத்துப்படி அரசாங்கத்தின் மூலம் செய்ய வேண்டியது எது செய்யக்கூடாதது எது என்பவற்றுடன் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எத்ததைய தீர்மானங்களும் அரசின் பொதுக்கொள்கையாகும் என்றார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை கூறுவதோடு இதனை நிச்சயிப்பதற்கான அதன் நோக்கங்களை உள்ளடக்கியதே பொதுக்கொள்கை என க்ளார்க் (Clarke) என்பவர் கூறினார்.


ஒரு பல்லின சமூகத்தில் பொதுக்கொள்கையாக்கமானது மக்கள் நலனை பேணுகின்ற வகையில் பாகுபாடின்றி உருவாக்கப்பட வேண்டும். பொதுக்கொள்கையானது நோக்கங்களையும் இலக்குகளையும் பிரகடனப்படுத்தக் கூடியவையாக இருத்தல் வேண்டும். இக்கொள்கைகள் இயற்றுவதில் நாட்டிலுள்ள அரசாங்கத்தின் தனித்துவம் பேணப்பட வேண்டும். இன்றைய நிலையில் பொதுக்கொள்கையானது உலகமயமாக்கலின் தாக்கத்தின் காரணமாக ஒன்றில் ஒன்று தங்கி காணப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுப் பயணங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, புதிய தொழினுட்பங்களின் உட்பாய்ச்சல், புதிய கலாசாரங்களின் வருகை, தனியார் மற்றும் தாராளமயமாக்க கொள்கை, உல்லாசப் பயணத்துறை போன்ற பல நடவடிக்கைகளின் காரணமாக இலங்கையில் பொதுக்கொள்கை உருவாக்கலில் பாரிய மாற்றங்கள் உருவாகியுள்ளன. நடைமுறையில் இன்று கொள்கை உருவாக்கலில் மக்கள் அபிப்பிராயம் புறந்தள்ளப்படுவது மறுக்க முடியாதுள்ளது. இந்த வகையில் ஒரு நாட்டில் பொதுக்கொள்கையானது முக்கிய ஒரு விடயமாகும்.



இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் சிறுபான்மையினருக்கெதிராக கொண்டு வரப்பட்ட பொதுக் கொள்கைகள்

இலங்கையானது பல் இனங்களையும் பல் வகைப்பட்ட சமூகங்களையூம் உள்ளடக்கியதாகையால் இனங்கள் மொழி ரீதியாக மற்றும் கலாசார ரீதியாக தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் பல கொள்கையாக்க நடவடிக்கைகள் இலங்கையில் உருவாக்கப்பட்டன. இவ்வாறான விடயம் தொடர்பில் சுதந்திரத்திற்கு முன்பு 1920ம் ஆண்டு முதல் வாதப்பிரதிவாதங்கள் இந்நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. 1926ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி முறைமை கொள்கையே இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்பு இலங்கையில் அரசாங்கமானது நிலையானதாக இருக்கவில்லை.

அரசாங்கங்கள் மாறிமாறியே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அரசாங்கமும் வெவ்வேறுபட்ட கொள்கைகளை உருவாக்கின. இவ்வாறான முறையில் உருவாக்கப்பட்ட பல கொள்கைகளே பிற்காலங்களில் இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கு அடிப்படையான காரணிகளாக அமைந்தமை யாவரும் ஏற்கக்கூடியதொரு கருத்தாகும்.


இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரமைடைந்த பின்பு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்கா பிரஜா உரிமை சட்டம் என்ற பெயரில் சட்ட மூலமொன்றை முன்வைத்தார் என்பதுடன் அதன் பிரதிபலனாக தோட்டப்புற தமிழ் மக்களின் வாக்குரிமையும், பிரஜா உரிமையும் இரத்துச் செய்யப்பட்டமையே இடம்பெற்றது. இந்த வகையில் டி.எஸ்.சேனாநாயக்காவின் சட்டம் பற்றி 1948ம் ஆண்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் இச்சட்டத்தின் வகுப்புவாத வர்க்க நோக்கங்களை அம்பலப்படுத்தினர். லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா ‘இச்சட்டங்கள் முழுமையான வகுப்புவாத நோக்கம் கொண்டவை என கூறினார். மேலும் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர்.டி.சில்வா இனவாதத்திற்கும் பிற்போக்கிற்கும் இடையிலான தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்;

                       “இச்சட்டத்தின் பின்னணியையும் சமூக நோக்கத்தையும் பார்த்தால் வகுப்புவாதம் பிற்போக்கிற்கு வாய்ப்பான ஆயுதம். இச்சட்டம் சர்வசன வாக்குரிமையின் எதிர்கால சவக்குழியை தோண்டப் பயன்படுவதாகும். ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக வகுப்புவாத அடிப்படையை பிரயோகிக்க அரசாங்கம் தொடங்குவது இன்று இலங்கையர் என ஏற்கப்படும் ஏனைய சிறுபான்மையினருக்கெதிராகவும் வேறுபாடு காட்டுவதற்கு வழிகோலும்” என கூறுகின்றார்
(ஹன்சாட் அறிக்கை ஆகஸ்ட் 1948)
இவ்வாறான முறையில் இவர் கூறியதைப் போலவே இப் பிரஜா உரிமை கொள்கை எதிர்கால இனப்பிரச்சினைக்கு அடித்தளமாகவே அமைந்தது. 1947-1972 காலப்பகுதிவரை நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியல் முறையின் மூலமும் முன்வைக்கப்பட்ட கொள்கைகள் இனப்பிரச்சினை உருவாக்கலில் பாரிய விளைவை ஏற்படுத்தியதெனலாம். சோல்பரி யாப்பின் கீழ் பெரும்பான்மை பிரதிநிதித்துவ முறை மூலமும் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்ற பிரச்சினைகள் எழுந்தன.

தனிச்சிங்களச் சட்டக் கொள்கை உருவாக்கப்பட்டமை

இலங்கையை பௌத்த நாடாக்க வேண்டுமென்ற தொனிப் பொருளில் 1940ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள மகாசபை 10 கொள்கைகளை முன்வைத்து நாடு ப+ராகவூம் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது. சிங்கள மொழியை அரச கரும மொழியாகவும் பௌத்த மதத்தை அரச மதமாகவும் ஏற்க வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாகும். 1950களில் முன்னனி பிரச்சினையாகிய தமிழர் சிங்களவருடைய மொழி உரிமை பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே எதிர்ப்புகள் கிளம்பின. 1956ம் ஆண்டு தேர்தல் நெருங்கிய காலப்பகுதியில் பாரியளவில் மக்களை அணிதிரட்ட அச்சிங்கள மகா சபையினருக்கு முடிந்தது. சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்ட பண்டாரநாயக்கா சில காலத்திற்கு முன்னர் அதாவது 1926ம் ஆண்டில் தாம் கொண்டிருந்த சிங்கள, தமிழ் இரண்டும் அரச கரும மொழிகளாக வேண்டும் என்ற முற்போக்கான கொள்கையைக் கைவிட்டு சந்தர்ப்பவாதத்திற்கு மாறிக் கொண்டு “சிங்களம் மட்டும்” என்பதை பிரதான போராட்டமாக கொண்டு தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியைப் பெற்றார். இதற்கு அவர் ஐம்பெரும் சக்திகளாக பௌத்த மதகுருமார், நாட்டு வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளரை அடிப்படையாகக் கொண்டு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இதன்படி 1956 ஜனவரியில் சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சிங்களத்தை மட்டுமே அரசகரும மொழியாக்கியமைக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் பாராளுமன்றத்தின் முன் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது அரசாங்கத்தினால் வன்முறை பயன்படுத்தப்பட்டு அது தடுக்கப்பட்டது. மேலும் கொழும்பு தமிழருக்கு எதிராகவும் கிழக்க மாகாண கல்லோயா பள்ளத்தாக்கு குடியேற்ற திட்டங்களில் வசித்த தமிழருக்கு எதிராகவும் வன்முறைகள் நிகழ்ந்தன. மேலும் 1956ம் ஆண்டு “சிங்களம் மட்டும்” என்ற இந்தக்    கொள்கையை பலவாறாக கண்டித்த பாராளுமன்ற இடதுசாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர். இந்தவாறான கொள்கைகள் எதிர்காலத்தில் பாரிய இனமோதலுக்கு வழிவகுக்கும் என்பதே    அவர்களின் பலமான வாதமாகும். பாராளுமன்ற விவாதங்களின் போது லெஸ்லி குணவர்தன பின்வருமாறு கூறினார்,
             
சிறுபான்மையினரை வலிந்து சிங்கள மொழியை ஏற்கும் படி நிர்ப்பந்திப்பது இனக்கலவரத்திற்கு வழிவகுக்கும் எனவும் இலங்கைக்கு பாரிய ஆபத்து வர உள்ளது. அம் மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால் அவர்கள் நாட்டிலிருந்து பிரிந்து போகக் கூட தீர்மானிக்கலாம்

 என பிரிவினை பற்றிய முன்னெச்சரிக்கையை தெரிவித்தார்.
(ஹன்சாட் ஜூன் 1956)
இத்தகைய ஒரு கருத்தையே கொல்வின் ஆர்.டி.சில்வாவும் கூறினார். அதாவது,
               “இச்சட்மானது எதிர்பாராத விளைவுகளைத் தரும், இரத்தம் வடியும் துண்டிக்கப்பட்ட இரு சிறு அரசுகள் ஒரு அரசிலிருந்து தோன்றக்கூடும் என்றார்”
(ஹன்சாட் 14  ஜூன்1956)
ஐம்பது ஆண்டுகளின் பின் முதலாவது கொடுமையான இன வன்செயலுக்கு 1956ம் ஆண்டின் மொழிப் பிரச்சினை தொடர்பான வற்புறுத்தல் வழிவகுத்தது எனலாம்.  

இவ்வாறு சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதைப் போன்ற தனிச்சிங்களக் கொள்கை உருவாக்கப்பட்டவுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய முரண்பாடுகளை கருத்தில் கொண்டு 1957ம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தமானது பல கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது,

• தமிழ் மொழியை வடக்கு, கிழக்கு மாகாண ஆட்சி மொழியாக்குதல்

• பிராந்திய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் நியமிக்கப்பட தேவையான ஏற்பாடுகளை தயார்படுத்தல்

• பிரஜா உரிமை தொடர்பான கொள்கைகளை சீர்திருத்தம் செய்தல்

• சிறுபான்மை தேசத்தின் மொழியான தமிழ் உத்தியோக பூர்வ மொழியாக அங்கீகாரம் செய்தல்போன்ற பல கொள்கைகளை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு எதிராக பௌத்த பிக்குகளின் வழிநடத்தல் மற்றும் ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பின்பு பண்டாரநாயக்காவினாலேயே அந்த உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1957ம் ஆண்டு காலப்பகுதியில்  எல்லா வாகனங்களிலும் ஸ்ரீ எழுத்தினை பொறிக்க வேண்டும் என அரசாங்கம் கூறியது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஸ்ரீ எழுத்தை தமிழில் பொறித்ததை தொடர்ந்து இன மோதல்கள் விரிசலடைந்தன. இவ்வாறு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தம் வசதிக்கேற்ப கொள்கைகளை உருவாக்கியமையே இனப்பிரச்சினையின் அடிப்படைகளாகும்.
முழு நாட்டிற்கும் சிங்களச் சட்டக் கொள்கை (1960களின் பின்)
1960ம் ஆண்டு ஏற்பட்ட சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கும் கொள்கை தமிழ் மக்கள் மீது பலவந்தமாக செயற்படுத்தப்பட்ட சம்பவமாக வரலாற்றில் இடம்பெற்றது. இவரின் ஆட்சிக்கால அரசின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டுமென சட்டமொன்று அங்கீகரிக்கப்பட்டது. அப்போது தமிழ் மொழி பேசும் முறைப்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் சந்தேக நபர்கள் எவ்வாறு சிங்களத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற பிரச்சினை எழுந்தது. இக்கொள்கையின் காரணமாக வடக்கு கிழக்கு உட்பட பல பிரசேங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நியாயமின்மையையும் குறைத்தும் மதிப்பிட முடியாது.

அரசாங்கத்தின் “சிங்களம் மட்டும்” என்ற கொள்கைக்கு எதிராக வடக்கில் போன்று தென்பகுதி மக்களும் தம் எதிர்ப்பை தெரிவித்தனர். 1961ம் ஆண்டு வடக்கு கிழக்கின் அனைத்து செயலாளர் அலுவலகங்களின் முன் தமிழ் அரசியல் கட்சிகளின் மூலம் சத்தியாக்கிரகங்கள் நடத்தப்பட்டன. அதற்கு பதிலளிக்கும் முகமாக அவசரகால சட்டம் பிரகடனபடுத்தப்பட்டு வன்முறையை ஈடுபடுத்தி தடுக்கப்பட்டதே அரசால் மேற்கொண்ட மற்றொரு பிரிவினைவாத செயலாகும். அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித ஆயுதத்தரப்பு அரசியல் இயக்கமொன்றும் செயற்படாததொரு வேளையில் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கம் இவ்வாறான தடுப்புக் கொள்கையை கடைபிடித்தது.


இதைத்தொடர்நது 1965ல் டட்லி சேனாநாயக்கா தேசிய அரசாங்கத்தில் சமஷ்டிக்கட்சி பிரதான பங்காளி கட்சியானது. இதன் விளைவாகவே சிறுபான்மையினரின் நலனை முன்னிறுத்தி டட்லி-செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனாலும் அந்த உடன்படிக்கைக்கும் தடைகள் பல எழுந்தன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பௌத்த பிக்குகளுடன் இணைந்து இவ்வுடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்டது.

கல்விக் கொள்கைகள் தொடர்பான சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமை (1970க்கு பின்)

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதன் விளைவாக 1970ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு தொடர்பான கருத்து வெளிவரத் தொடங்கியது. 1970ம் ஆண்டு தேர்தலுக்காக சுயாதீனமாக முன்வந்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக இருந்த சி.சுந்தரலிங்கம் மற்றும் வீ.நவரட்னம் ஆகிய இருவரும் தனிநாடு பற்றிய கருத்தை முன்வைத்தனர். ஆனால் சமஷ்டிக்கட்சி அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறியதன் விளைவாக அவர்கள் இருவரும் படுதோல்வியடைந்தனர். தமிழ் வேட்பாளரை தோல்வியடையச் செய்ய சமஷ்டிக் கட்சியில் தமிழ் பிரதிநிதிகள் செயற்பட்டமையும் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சமாகும். 1972இல் கூட்டு முன்னனி அரசாங்கத்தின் யாப்பமைப்பு சபையின் முன்னிலையில் தமிழ் மக்கள் சார்பில் பல கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. அவையும் பின்னர் நிராகரிக்கப்பட்டன.
மேலும் மொழியை அடிப்படையாகக் கொண்ட தரப்படுத்தல் முறை 1972ல் பல்கலைக்கழகத் தெரிவில் கொண்டு வரப்பட்டது. இந்த முறையானது தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உட்செல்லும் சந்தர்ப்பத்தை குறைப்பதற்கு ஏதுவாயிருந்ததால் இளைஞர்கள் மத்தியில் அரசுக்கெதிரான எதிர்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. இத்தரப்படுத்தல் முறையினால் அனுராதபுர மாவட்ட சிங்கள மாணவர்கள் குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்ட அதே வேளை மருத்துவ பீடத்தில் யாழ் தமிழர்கள் உயர் புள்ளியை பெற்றிருந்த போதும் பல்கலைக்கழக தெரிவிலிருந்து புறக்கணிக்கப்பட்டனர். இதற்கேற்ப சிறுபான்மை சமூகத்திற்கு தமது உரிமையை ஜனநாயக ரீதியிலான கட்டமைப்புக்கள் வெற்றி கொள்ளவிருந்த அனைத்து சந்தர்ப்பமும் சீர் குலைக்கப்பட்டு கொண்டிருந்தன.
அதனை தொடர்ந்து 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனிநாடொன்றை வெற்றி கொள்ளல் என்பதே முக்கிய கருப்பொருளாக அமைந்தது. இதன் விளைவாக 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இது திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக வடபகுதி தமிழ் தொழிலாளர்களின் உற்பத்திக்கு உரிய விலையை பெற முடியாமல் போனது. இதனால் சிறுபான்மை சமூகத்தின் உற்பத்திகள் பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் சிறுபான்மை சமுதாயத்தின் விவசாயத்தில் மட்டுமன்றி அரசு காணிப் பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களிலும் தமிழர்களை முழுமையாவே புறக்கணித்தது.

1978ம் ஆண்டில் புதிய யாப்பமைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சி முதலில் ஒப்புக் கொண்டதன் படி அனைத்து கட்சிகளுக்குமான மாநாடொன்றைக் கூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கேற்ப 1972ல் இடம்பெற்றது போல 1978ல் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் கவனத்தில் கொள்ளாமல் முழு நாட்டிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தம் வகையில் பக்கச்சார்பான யாப்பொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது. 1978 புதிய யாப்பு அமைக்கப்பட்டதன் பின்பு வடக்கு கிழக்கில் அரச அடக்கு முறை கொள்கை நடவடிக்கைகள் தீவிரமாக காணப்பட்டன. 1978ம் ஆண்டு வரையப்பட்ட யாப்பு சிங்களம் அரச கரும மொழியாக தொடர்ந்திருக்கும் அதே சமயம் தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாக ஏற்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முன்வைத்தது. இவ்வாறான சலுகையை கொடுத்த போதும் கூட சிங்கள மொழிக்கும் பௌத்தத்திற்கும் முதன்மையான விசேட அந்தஸ்தை யாப்பு தெளிவாக சுட்டிக்காட்டியது. இவ்வாறான பல பிரிவினைகள் தொடர்பான கொள்கைகளே இலங்கையில் இனப்பிரச்சினையானது தலைதூக்குவதற்கு ஏதுவாயிருந்தன எனலாம்.

இனப்பிரச்சினை உருவான பின் அதற்கான தீர்வாக கொண்டுவரப்பட்ட கொள்கைகளின் தோல்வி நிலையும் இன்று இனப்பிரச்சினைக்கு தீர்வாக எதிர்பார்க்கப்படும் கொள்கைகளும்

1980களின் பின்பு பிரிவினைவாதத்தின் காரணமாக இலங்கையில் இனப்பிரச்சினையானது பெரியளவில் உருவெடுத்தது. 1983 காலப்பகுதிகளில் அரசாங்க கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையில் கூடுதலான சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டமை, வீடுகளுக்கு சென்று தாக்குதல் நடத்தியமை, வடக்கில் அரசியல் மற்றும் ஆயுதப்புரட்சிகள், போன்ற பல வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. இவ்வாறான இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு உறுதியான ஒரு தீர்வை தேடும் முகமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் பல கொள்கைகளும் பேச்சவார்த்தைகளும் இடம்பெற்றன. இருப்பினும் கூட இவ்வாறான கொள்கைகள் இனப்பிரச்சினையை நிறுத்துவதற்கோ முடிவுக்கு கொண்டு வருவதற்கோ பயனளிக்கவில்லை. கூடுதலாக இந்த கொள்கைகளும் உடன்படிக்கைகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

1985ம் ஆண்டில் அப்போதிருந்த அனைத்து தமிழ் கட்சிகளின் பங்குபற்றலுடன் பூட்டான் தலைநகர் திம்பு நகரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில்,

• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றல்

• சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தும் வகையில் அவர்களை தேசிய இனமாக ஏற்றல்

• தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை, பிரஜா உரிமையை ஏற்றல்

போன்ற பல கொள்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஆனாலும் இவ்வாறான கொள்கைகளை ஆழமாக கவனத்தில் எடுக்க தயார்நிலை அந்த அரசிற்கு புலப்படவில்லை. இவ்வாறு திம்புக் கொள்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்பு எல்.ரீ..ரீஈ (LTTE) அமைப்பு தனது ஆயுத இயக்கத்தை சக்திமிக்கதாக்கிக் கொண்டதுடன் இலங்கை நாடு வேகமாக சிவில் யுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டது.

1991இல் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் அரசாங்கத்தின் வழிநடத்தலின் கீழ் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட “மங்கள முனசிங்க” தெரிவுக் குழுவின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை எடுக்கக் கூடிய கொள்கைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் இந்த குழுவின் கொள்கைகளுக்கும் தமிழ் கட்சிகளின் கொள்கைகளுக்கும் இடையில் பாரியளவு வித்தியாசங்கள் இருந்தமையால் அந்த முறையும் தோல்வியிலேயே அமைந்தது.

1994-1997 வரையான காலப்பகுதிகளில் பொதுஜன ஐக்கிய முன்னனியின் யோசனைகளும் கொள்கைகளும் அதிகாரப்பகிர்வு, நீதிமன்ற அதிகார பரவலாக்கம், வெளிநாட்டு உதவியைப் பெறுவதற்கான வழிகளை அதிகரித்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் அமைந்திருந்த போதும் அந்த யோசனைகளும் நிராகரிக்கப்பட்டன. 2000ம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னனி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து புதிய யாப்பு சட்டமூலமொன்றை தயாரித்தன. தமிழருக்கு சுய அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டாலும் நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடு வஞ்சகமானது என்பதன் பேரில் இந்த சட்டமூலம் எரிக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக இருந்த இந்த பிரச்சினையும் தோல்வியடைந்தது.

மேலும் 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அரசாங்கம் உருவானதும் நோர்வே மத்தியஸ்தத்தடன் அரசிற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதில் ஆயுத எதிர்ப்புகளை முடிவுக்கு கொண்டு வரல், நீண்டகால தீர்வை ஏற்படுத்திக் கொள்ளல், பேச்சுவார்த்தைக்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொள்ளல் போன்ற கொள்கைகள் காணப்படுகின்றன. இப்புரிந்துணர்வும் பின்பு பல தரப்பினர் மத்தியில் கொள்கை முரண்பாட்டிற்கு வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து 2002ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசிற்கும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே கொள்கை உடன்படிக்கை உண்டானது. இந்த உடன்படிக்கையில் உள்ள கொள்கைகளாக வரி அறவிடுதலை வரையறை செய்தல், முஸ்லிம் மக்களிடமிருந்து அபகரித்த காணிகளை திருப்பிக் கொடுத்தல் போன்ற பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் கூட இக்கொள்கைகளும் சரியான முறையில் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டன. இவ்வாறான பல கொள்கைகள் இன மோதலை நிறுத்தும் செயன்முறையில் தோல்வியையே கண்டன.





ஆரம்பகால பிரிவினை கொள்கைகளின் விளைவாகவே இலங்கை பாரியதொரு யுத்தத்தை கண்டதெனலாம். இன்று இந்த இனமோதல்கள் முடிவுற்றுள்ளது என்ற போதிலும் இன்னும் அதற்கான தாக்கங்கள் குறையவில்லை. கொள்கைகள் அமைக்கப்படும் போது அவை பெரிதும் பெரும்பான்மைக்கு சார்பாக அமைவதன் காரணமாகவே பல பிரச்சினைகள் நாடுகள் மத்தியில் ஏற்படுகின்றன. கொள்கைகள் உருவாக்கப்படும் பொழுது பாகுபாடின்றி இரு சாராருக்கும் பொதுவானதாக உருவாக்கப்படல் அவசியம். கல்வி, தொழில், விவசாயம், உரிமைகள் போன்ற பல விடயங்களிலும் பக்கச்சார்பற்ற முறையில் நாட்டில் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய இலங்கை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டதன் படி இந்த நாட்டில் சிறுபான்மை என்றதொரு பிரிவு இல்லை எல்லா மக்களும் சமமாகவே மதிக்கப்படுவர் என்ற கொள்கைகள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட இன்னுமொரு கொள்கையெனலாம். இவ்வாறான வகையிலேயே இலங்கை அரசாங்கங்களின் கொள்கையாக்கங்களும் அவற்றின் விளைவுகளும் காணப்படுகின்றன.






ஆக்கம்
யாழினி சரண்யா
3ம் வருடம்
அரசியல்த்துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்

1 கருத்து:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites